பஞ்சாபிலுள்ள ஜோகி சீமா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19). இவருக்கும் நியூசான்ட் நகரைச் சேர்ந்த சாஹில் ஷர்மா (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி திருமணம் நடந்தது.
லண்டனில் வசித்து வந்த, இந்த தம்பதிகளுக்கிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மேஹாக் இந்தியாவில் உள்ள தன் தாயிடம் தொலைபேசி மூலம் பலமுறை சொல்லி அழுதுள்ளார். அதாவது, கணவர் சாஹில் ஷர்மா தன்னை மோசமாக நடத்துவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு நாட்களாக மகளிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால், சந்தேகம் அடைந்த மேஹாக்கின் தாய், லண்டனில் வாழும் தங்கள் உறவினர் ஒருவரை தொடர்புகொண்டு, மகளைப் போய் பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். அப்போதுதான் மேஹாக் கொலை செய்யப்பட்டுள்ள விவரமே தாய் மதுபாலாவிற்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மேஹாக்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.