கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கான தடை நீடிப்பதாக, அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் வகுப்பறைகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் தடையை நீக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதான்ஷு துலியாவும், ஹேமந்த் குப்தாவும், நேற்று மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால், கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்பதால், பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கான தடை நீடிப்பதாக, அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.