குஜராத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலைகளை வன அதிகாரிகள் மீட்டு, ஆற்றுக்குள் விட்டனர். குஜராத்தின் வடோதராவில் ஆகஸ்ட் 27 முதல் 29 வரையில் பெய்த கனமழையால், விஸ்வாமித்ரி ஆற்றில் ஏற்பட்ட உயர் நீர் மட்டத்தால், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலைகள், பாம்புகள் போன்றவை நுழைந்தன.
கனமழையால், அஜ்வா அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும்போது ஏற்பட்ட வெள்ளத்தில் 24 முதலைகள், பாம்புகள், சுமார் 40 கிலோ எடையுள்ள பெரிய ஆமைகள், முள்ளம்பன்றி உள்பட 75 பிற விலங்குகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அவற்றில் 14 அடி நீளமுள்ள முதலைகளும் அடங்கும். இருப்பினும், முதலைகளோ வேறு ஜீவராசிகளோ மனிதர்களைத் தாக்கவில்லை என்று கூறுகின்றனர். இதனையடுத்து, ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்த பின்பு, மீட்கப்பட்ட உயிரினங்கள் ஆற்றில் விடுவிக்கப்படும் என்று வடோதரா ரேஞ்ச் வன அதிகாரி கரன்சின் ராஜ்புத் தெரிவித்தார்.