குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இத்தேர்வினை 7,93,966 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள்.
தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, தேர்வர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும். அதேபோல் 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள், எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.