ஓசூரில் அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்தில் கஞ்சா செடி முளைத்துள்ளதால் அரசு அலுவலர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தை சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், 5 நீதிமன்றங்கள், மகளிர் காவல்நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போக்குவரத்து காவல்நிலையம், வருவாய்துறை அலுவலகம், புள்ளியல்துறை என பல்வேறு அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இயங்குகிறது.
அதே போல் இந்த வளாகத்திற்கு ஓசூர் நகர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றி உள்ள கிராம மக்கள் அரசு உதவிகள் பெறவும், புகார் அளிக்க காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் என தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது.
மேலும் பாதுகாக்கப்பட்ட அரசு கோப்புகள் உள்ள இந்த பகுதியில் சுற்று சுவர் இல்லாமலும், இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாததால், மது அருந்துவதும், கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு நிலவுகிறது.
தற்போது கஞ்சா குட்கா தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் நிலையில் நீதிமன்றத்திற்கு எதிரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஒட்டி கஞ்சா செடி முளைத்துள்ளதால் அரசு அலுவலர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கஞ்சா செடிகளை வேருடன் பறித்து அழித்தனர்.