பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்கள் பிங்க் நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இயங்குவதால் பெண்களுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது..
அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். சிலசமயங்களில் சில அரசு பஸ் கண்டக்டர்களுக்கும், பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது.
இதன் காரணமாக பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகளுக்கு பிங்க் நிறம் பூசப்பட்டது.
முதற்கட்டமாக 60 பேருந்துகள், பிங்க் நிறம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளுக்கும் இந்த நிறம் பூசுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிங்க் நிறத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமலும், ஆண்கள் வழக்கம் போல கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம்.
இந்த பிங்க் நிற பஸ்களை, தன்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைப்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு சென்னையில் ஏற்பட்டுள்ளது.