சென்னை பாடி, சத்யா நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், (36). இவர் டெலிகிராம் ஆப் வாயிலாக வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை கண்டு சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்கள், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி, அவரது பான் கார்டு, ஆதார் கார்டு, ஆகியவற்றை சேகரித்து, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும்படி கூறியுள்ளனர்.
அதன்படி அவரை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். அதன் பின் அந்த டெலிகிராம் முகவரி முற்றிலும் செயலிழந்து விட்டது கண்டு கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையிப் விசாரித்த போலீசார், டெலிகிராம் ஆப் வாயிலாக, பகுதிநேர வேலை தேடுபவர்களை குறி வைத்து, ஆசை வார்த்தை கூடி மோசடியில் சிக்க வைத்தது தெரிய வந்தது.
கார்த்திக் பணம் செலுத்திய அந்த வங்கிக் கணக்கு குறித்து விசாரித்த போது, அது சென்னை தி. நகர், உஸ்மான் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வம் (42), என்பவரது வங்கி கணக்கு என்பது தெரியவந்தது. அவரை இணையதள குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, இணையதளம் வாயிலாக மிகப்பெரிய ஆன்லைன் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செல்வம் கொடுத்த தகவலின் அடிப்படையில் இணையதள குற்றவாளிகளான சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன், 44, சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ஹலிக்குள் ஜமால், 42, சென்னை நங்கநல்லூர், வி வி நகரைச் சேர்ந்த அஷ்கர் ஷெரிப், 38, ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இந்த மோசடியில் தங்களுக்கு கமிஷன் தொகை மட்டுமே கிடைக்கும் என்றும், வேலை இல்லாதவர்களிடம் ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் பணம், அவர்களின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி புதிய வங்கி கணக்கு ஒன்றை துவக்கி, அதன் மூலம் பெறப்படும் பணத்தை சீனா கேம்ப்லிங் ஆப் மற்றும் இதர ஆன்லைன் மோசடி குற்றங்கள் செய்யும் உரிமையாளர்கள் வாயிலாக யூ எஸ். வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றம் செய்ததையும் ஒப்புகொண்டனர்.
இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.