சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக விளையாட வரும் வீரர்களுக்கு என தனியாக “photobooth” உள்ளது. மேலும் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கண்ணைக் கவரும் வகையில் “I love Mamallapuram” என்ற செல்ஃபி ஸ்பாட் நிறுவப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்டோ, வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு உள்ளே செல்வதற்கு முன்பு அங்கு மலர்களால் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவில் ஏறி அமர்ந்து, உற்சாகமாக புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.
இந்திய ஆட்டோவில் பயணிப்பது தங்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் வெளிநாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர். மாமல்லபுரத்தில் பல சிறப்பு வாய்ந்த கட்டங்கள் உள்ளன. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்.
ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இந்த சிற்பங்களைக் கண்டு வெளிநாட்டவர்கள் வெகுவாக வியந்து வருகின்றனர். இந்நிலையில் போட்டிக்கு வந்த வீரர்கள் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து ரசித்து வருகின்றனர்.