புதுச்சேரி பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் வினோத் (39) என்பவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மகேஷ் (16) காராமணிக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 12-ம் தேதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விபத்துக்குள்ளானார். இதையடுத்து புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு மகேஷை பார்க்க அவரது தந்தை வினோத் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்த அவரது மனைவிக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வினோத்தை அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து டாக்டர் நவீன்குமார் (31) மருத்துவமனைக்கு வெளியே சென்றபோது அங்கு கத்தியுடன் நின்று கொண்டிருந்த வினோத் திடீரென டாக்டர் நவீன்குமாரின் கழுத்தில் கத்தியால் வெட்டி உள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் டாக்டர் நவீன்குமார் அளித்த புகாரை தொடர்ந்து பெரியகடை போலீசார் வினோத் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்ததால் மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் அங்கு வந்த டாக்டரை கத்தியால் வெட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.