திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் என்ற அணை உள்ளது. இந்த அணை கட்டுவதற்காக, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, 150 விவசாயிகளிடம் இருந்து, 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்காக, மானாவாரி பூமி வகை நிலங்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 9 ஆயிரம் ரூபாயும், தோட்ட பூமி வகை நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 27 ஆயிரம் ரூபாயும், நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
ஆனால், அந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாக கூறி, நிலத்தை வழங்கிய விவசாயிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிகளின் நிலங்களுக்கு தகுந்த தொகையை, வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பு வழங்கி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதிகாரிகள் நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதாக, நிலத்தை வழங்கிய விவசாயிகள் அறிவித்துள்ளனர்.