நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருவதையொட்டி, எதிர்கட்சியினர், ஆளுங்கட்சியினர் என்று பல்வேறு தரப்பினர், அனல் பறக்க பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிரச்சாரம் செய்யும்போது, தங்களையும் மீறி சில சர்ச்சை கருத்துக்களையும், தவறான கருத்துக்களையும் அவர்கள் கூறிவிடுகின்றனர்.
இந்நிலையில், குஜராத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோவிலின் பிரதன் பிரதிக்ஷா நிகழ்விற்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறினார்.
அவர் ஒரு பழங்குடியினத்தவர் என்பதால் தான், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராகுல் காந்தியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் அனைத்தும் பொய் என்றும், அது அடிப்படை ஆதாரம் அற்றது என்றும், தவறாக வழிநடத்தக் கூடிய கருத்துக்கள் அவை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தியின் பேச்சுக்கு, அவர் தனது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ திரௌபதி முர்ம மற்றும் ராம் நாத் கோவிந்த் ஆகிய இரண்டு பேரும், பிரதன் பிரதிஷா நிகழ்வுக்கு, அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை எளிய மக்கள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில், அழைக்கப்பட்ட அவர்கள் கலந்துக் கொள்ளவும் செய்தார்கள். இவர்கள் மட்டுமின்றி, கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும், இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
மேலும், பிரதன் பிரதிக்ஷா சடங்குகளின்போது, அனைத்து தரப்பு சாதிகளை சேர்ந்தவர்களுக்கும், வழிபடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன” என்றும் தெரிவித்தார்.