நாங்குநேரி மாணவர் சின்னதுரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டுப்பட்ட மாணவர் சின்னதுரை ஆகியோர் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இருவருக்கும் திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா வழங்கி முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் நாங்குநேரி மாணவர் சின்னதுரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
முதலமைச்சரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் நேரில் அழைத்து என்னை பாராட்டினார்.
என்னுடைய உயர்கல்விக்கு உதவி செய்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார். B com CA படிக்க வேண்டும் என்பது என் ஆசை என்று மாணவர் தெரிவித்தார்.
மேலும், என் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு உதவி செய்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனக்கு நடந்தது போன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெற கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேல வர வேண்டும். அந்த சம்பவம் எனக்கு நடக்காமல் இருந்திருந்தால் நான் 530 க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன். திருநெல்வேலியிலயே கல்லூரியில் சேர்ந்து படிக்க போகிறேன். என்று மாணவர் தெரிவித்தார்.
மாணவர் சின்னதுரை பெற்ற மதிப்பெண்கள் தமிழ் – 71, ஆங்கிலம் – 93, பொருளாதாரம் – 42, வணிகவியல் – 84,கணக்குப்பதிவியல்- 85, கணிப்பொறி பயன்பாடு – 94 என மொத்தம் – 469.