மனிதனின் எந்தவொரு கட்டுமானமாக இருந்தாலும், இயற்கையின் சக்தி, அதனை எளிமையாக தகர்த்துவிடும். இதற்கு எந்தவொரு பணக்கார நாடும் விதிவிலக்கு அல்ல. இயற்கையின் சக்திக்கு உதாரணம் காட்டும் விதமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் பகுதிகளில், அதிதீவிரமான கனமழை பெய்து வருகிறது.
இத்தகையான கனமழையால், அப்பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள், ஷாப்பிங் மால்களில், அதிகப்படியான வெள்ளம் தேங்கி, இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
சாலையில் உள்ள கார்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியதோடு மட்டுமின்றி, அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், துபாயின் மெட்ரோ நிலையத்தில், கணுக்கால் வரை தண்ணீர் தேங்கிய சம்பவமும் அங்கு நடந்துள்ளது.
இவ்வாறு கடுமையான மழைப்பொழிவு அங்கு ஏற்பட்டுள்ள நிலையில், பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா அதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இது மும்பை இல்லை.. துபாய் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவிற்கு, ஜெட் ஏர்வேஸின் முன்னாள் சி.இ.ஓ சஞ்சீவ் கபூர், பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, ஆனந்த் மகேந்திராவின் எக்ஸ் பதிவுக்கு, ரிப்ளை செய்த சஞ்சீவ் கபூர், “தவறான முறையில் ஒப்பீடு செய்றீங்க.. துபாய் அந்த அளவு கடுமையான மழையை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், கட்டமைக்கப்படவில்லை. பெரும்பான்மையான நகரங்களை மழை வெள்ளத்தில் மூழ்க வைக்கும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், மும்பையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டால், அந்த வானிலைக்கு ஏற்ற வகையில், மும்பையும் கட்டமைக்கப்படவில்லை. ஆனால், அவ்வாறு பணி பெய்தால், அதனை பணி படர்ந்து கிடக்கும் ஊரான ஓஸ்லோவில் உள்ள மக்கள், கிண்டல் செய்வார்களா? என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இவ்வாறு பதிலடி கொடுத்த சில மணி நேரங்களில், இன்னொரு பதிவை, சஞ்சீவ் கபூர் பதிவிட்டார். அதில், “மீண்டும் இந்த பதிவை படித்த பிறகு, உங்களுடைய Tone துபாயை கிண்டல் செய்வது போல் இல்லை.
ஆனால், கனமழையை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், துபாய் நகரம் உருவாக்கப்படவில்லை என்பது தான், என்னுடைய அடிப்படையான கருத்து. அதிதீவிரமான வானிலையை தாக்கு பிடிப்பதற்கு ஏற்ற வகையில், நகரத்தை கட்டமைப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம்” என்று கூறியுள்ளார்.