டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டை தடுப்பதற்கு, அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.
இதற்கிடையே, ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசிடம் முறையிட்ட டெல்லி அரசு, உபரி நீரை திறந்துவிடுவதற்கு கேட்டிருந்தது. அதற்கு, ஹிமாச்சல பிரதேச அரசும் ஒப்புக் கொண்டது.
ஆனால், டெல்லிக்கு தண்ணீரை அனுப்ப வேண்டும் என்றால், அதற்கு ஹரியானா பாஜக அரசின் உதவி தேவை. அந்த மாநிலத்தில் உள்ள தடுப்பணை வழியாக தான், தண்ணீர் அனுப்பி வைக்க முடியும்.
ஆனால், கட்சிகளுக்கு இடையே உள்ள பிரச்சனை காரணமாக, தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லி அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று, அது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், “ஹிமாச்சல பிரதேச அரசு வழங்கிய உபரிநீர் அணைத்தையும் தலைநகர் டெல்லிக்கு திறந்து விட, ஹரியானாவின் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில், தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் நெருக்கடியில் உள்ள டெல்லிக்கு, 137 கனஅடி உபரி நீரை திறக்க வேண்டும் என்று, ஹிமாச்சல பிரதேச அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேச அரசுக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை என்றும், அது தங்களிடம் உள்ள உபரிநீரை திறந்துவிடுவதற்கு, தயாராக உள்ளது என்றும், நீதிபதிகள் அமர்வு கூறியது.
மேலும், ஹிமாச்சல பிரதேச அரசின் மூலமாக திறந்துவிடப்படும் உபரிநீர், டெல்லியை அடைவதற்கு, வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், ஹரியான அரசாங்கத்திற்கு, விடுமுறை அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி அரசாங்கத்தால், தண்ணீர் வீணாக்கப்படவே கூடாது என்பதையும், உச்சநீதிமன்றம் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 137 கனஅடி உபரிநீர் வரும் ஜூன் 7-ஆம் தேதி அன்று, ஹிமாச்சல பிரதேசத்தால் திறந்துவிடப்படும் என்றும் கூறினர். மேலும், இதுதொடர்பான வழக்கை, ஜூன் 10-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.