ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை செப்.1 காலை வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தெற்கு ஒடிசாவின் கடற்கரைகளுக்கு இடையே கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இது மேலும் வடமேற்கு, வடக்கு ஆந்திராவை, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நிலை கொண்டிருக்கும். இதனால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கரில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 4 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிலர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் மகபூபாபாத்-கேசமுத்ரம் இடையேயான ரயில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
விஜயவாடாவிலிருந்து செல்லும் 12 ரயில் சேவைகளை ரத்து செய்து மத்திய தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.