ஒடிசா மாநிலத்தில், வரும் 13-ஆம் தேதி அன்று, நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே சமயத்தில் நடக்க உள்ளது. இந்த தேர்தலையொட்டி, ஒடிசாவின் கந்தம்மல் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஒடிசா எப்போதும் அன்பையும், ஆதரவையும் எனக்கு தருகிறது. எனது தன்னலமற்ற சேவையின் மூலமாக, உங்களது நம்பிக்கையை மீண்டும் உங்களுக்கு தருவேன். 26 வருடங்களுக்கு முன்பு, இன்று தான், அடல் பிகாரி வாஜ்பாய் பொக்ரான் பரிசோதனையை நடத்தினார்.
இந்த அனு ஆயுத சோதனை தான், இந்தியர்களை உலக நாடுகள் மத்தியில், பெருமையுடன் இருக்க வைத்தது.
நமது பலத்தை கண்டு உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நிலையை, முதல் முறையாக இந்தியா அப்போதுதான் உருவாக்கியிருந்தது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி தங்களது சொந்த மக்களையே அச்சுறுத்திக் கொண்டு இருந்தது மற்றும் பாகிஸ்தான் ஒரு அனுஆயுத சக்தி கொண்ட நாடு என்பதை தொடர்ந்து வலியுறுத்தி, மக்கள் மத்தியில் பயத்தை விதைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் வலிமையற்ற மனநிலையின் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் மக்கள் பல வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருந்த தீவிரவாதி தாக்குதல்களை, இந்தியா நிச்சயம் மறக்கவே மறக்காது. தங்களது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதால், மும்பை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிறகு, எந்த விசாரணையையும், காங்கிரஸ் கட்சி அமைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “உங்களது ஒரு வாக்கு இரட்டை இன்ஜின் கொண்ட அரசாங்கத்தை இங்கு கொண்டு வரவைக்க முடியும். தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்துங்கள்.. எங்களது வேட்பாளர் வெற்றி அடைய உதவுங்கள்” என்று கூறினார்.