கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர்.
கரூர் – கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அருகில் உள்ள நூல் குடோன், ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனையை தொடங்கியுள்ளனர்.
இதேபோல் கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம் திரு.வி.கா சாலையில் உள்ள எம்ஆர்வி ட்ரஸ்ட் அலுவலகம், ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் கரூர் மாவட்ட காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் பூட்டு போடப்பட்டு ஆட்கள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
உள்ளூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரின் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருவதால் கரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.