சொத்து வரி மற்றும் பால், மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் அனுமதியின்றி சென்னை முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்துவரி, பால் மற்றும் மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து ஆளும் தி.மு.க அரசைக் கண்டித்து எதிர்கட்சியான அ.தி.மு.க சார்பில் சென்னை முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. குறிப்பாக அ.தி.மு.க ஈ.பி.எஸ் அணி சார்பில் நேற்று சென்னை முழுவதும் 33 இடங்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டங்களுக்கு அ.தி.மு.க ஈ.பி.எஸ் அணி சார்பில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாத நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் 33 இடங்களில் போராட்டம் நடத்தியதற்காக அனுமதியின்றி கூடுதல், அரசு உத்தரவை மீறி செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் 33 வழக்குகள் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ராயபுரத்தில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், வேப்பேரியில் போராட்டம் நடத்திய அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.