காங்கிரஸ் மீதுதான் பாஜக-வுக்கு எப்போதும் பயம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது, “ஜம்மு காஷ்மீருடன் தனக்கு இருப்பது ரத்த உறவு என்பதை ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார். எனவே, வரும் தேர்தலில் ஜம்மு -காஷ்மீர் எங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் மீதுதான் பாஜக-வுக்கு எப்போதும் பயம். பயப்படுபவர்களை ஆதரிக்காதீர்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். உங்கள் உரிமைகள், சுயமரியாதை மற்றும் நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒட்டுமொத்த இந்தியாவும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேர்தலை எங்கு எப்போது தொடங்க வேண்டும் என்பதை பாஜக தான் எப்போதும் தீர்மானிக்கிறது. அவர்களின் கோபம் மற்றும் விரக்தி அனைத்தும் காங்கிரஸை மட்டுமே குறிவைக்கிறது, ஏனெனில் வேறு எந்த கட்சியும் கடுமையான போட்டியை கொடுக்கவில்லை. போராடத் துணிந்த ஒரே நபர் ராகுல் காந்தி. நாட்டைக் காப்பாற்ற, உங்கள் கலாச்சாரம் மற்றும் உரிமைகளைக் காப்பாற்ற உங்கள் வாக்குகள் எங்களுக்குத் தேவை” என தெரிவித்தார்.