தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த கொடிக்கம்பத்தை அகற்ற முற்பட்ட போது, அரசு ஊழியரை தாக்கியதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இவரது வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது அரசு ஊழியர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவரான அமர் பிரசாத் ரெட்டி, அரசு ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அமர் பிரசாத் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அமர் பிரசாத் ரெட்டியும் கைதாகி இருக்கிறார்.