மும்பையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டதின் எதிரொலியாக, சென்னை மாநகராட்சி கடந்த 2 நாட்களில் 460 விளம்பர பலகைகளை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023ன்படி, விளம்பர பலகைகள், பதாகைகள் வைத்துக்கொள்ள உரிய வழிகாட்டுதலுடன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம் அவ்வாறு உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது..
சென்னையில் 20 அடி அகலம் 12 அடி உயரம் என்பது தான் அதிகபட்ட அளவாக இருக்க வேண்டும். சாலை சிக்னல்களில் அமைக்கக் கூடாது என பல விதிமுறைகள் உள்ளன..
விளம்பர பலகை நிறுவ இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் 40 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாகவும் மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும் உரிய அளவீடுகளை தாண்டி வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி அகற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.