முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஊடகப் பேட்டியில் கூறுகையில், “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து இன்று செந்தில் பாலாஜி வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.