சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன.
இதில் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். இந்த தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பே (பிப் 18) பாஜகவை சேர்ந்த சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென தனது ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.
சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.