அதிமுக பிரமுகர் சுமனை ஓட ஓட விரட்டிப் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் சுமன், இவருடை மனைவி விச்சூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த சுமனை திருவிழாவிற்கு பத்திரிகை எழுத வேண்டும் என்று கூறி சிலர் அழைத்து சென்றனர். ஊராட்சியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியின் கீழ் சுமன் பேசிக் கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுமனை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
அருகில் இருந்தவர்கள் சுமனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சுமனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய மணலி புதுநகர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீஸார் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கோவில் திருவிழா தொடர்பாக சுமனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண் என்பவருக்கும், தகராறு ஏற்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பினரும் சமாதானமாக சென்றனர்.
இந்நிலையில் மறுநாளான நேற்று கொலை அரங்கேறியுள்ளது. எனவே முன்பகையால் கொலை நடந்துள்ளதா அல்லது வேறு காரணமா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.