கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
ஆனால் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்த வனப்பகுதியை ஒட்டி யானை தடுப்பு அகழி அமைத்தல், சோலார் மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இவை போதிய பலனளிக்கவில்லை.
இந்நிலையில், மலைக்காட்டை ஒட்டியுள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சியில் தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பமான ஏ.ஐ (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரை கி.மீ தொலைவிற்கு வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை முயற்சியில் யானைகள் வழக்கமாக ஊருக்குள் நுழையும் இடத்தை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அத்துடன் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ மானிட்டரில் இணைக்கப்பட்டு அங்கிருந்து வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு சமிக்ஞை(சிக்னல்) கொடுக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவிற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால் இந்த கேமரா மூலம் கண்டறியப்பட்டு ஏ.ஐ தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல் அனுப்புகிறது.
அங்கிருந்து வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சைரன், மனிதர்கள் யானைகளை கண்டால் சப்தமிடும் ஒலி, ஜேசிபி இயந்திரம் இயங்கும் சப்தம் உள்ளிட்ட பல்வேறு சப்தங்களை தானாகவே ஒலியாக வெளியிடுகிறது.
அவ்வாறு வெளியிடப்படும் சப்தத்தை கேட்டு யானைகள் சற்று நேரம் நின்று கவனித்த விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புகின்றன.
இந்த சோதனை முயற்சியின் பயனாக வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேற முயற்சிப்பது வெகுவாக குறைந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப முறை முழுமையாக வெற்றியடைந்தால் யானைகளால் பாதிப்பு ஏற்படும் மேலும் சில இடங்களிலும் இதனை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.