அதிமுக-வின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு-வை, அதிமுகவின் கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில், ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்றும், அவருக்கு முன் வரிசையில் இடம் அளிக்க வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார். இதன்மூலம், ஓ.பன்னீர் செல்வம், இனி வரும் நாட்களில் பின்வரிசையில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.