கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பூண்டியில் வெள்ளியங்கிரி மலைத் தொடர் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். கோடை காலத்திற்குப் பிறகு மலையில் பனி அதிகமாக இருக்கும் என்பதால் அதன் பின்னர் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. மொத்த பயண தூரம் 6 கி.மீ. கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலை உச்சியை அடையலாம்.
திருப்பூரைச் சேர்ந்த வீரக்குமார் (31) கடந்த பதினெட்டாம் தேதி வெள்ளியங்கிரி மலை ஏறிய சாமி தரிசனம் செய்துவிட்டு இறங்கிய போது ஏழாவது மலையில் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனை அடுத்து இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.