சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்றில் 40 பேர் ஏற்காடு சுற்றுலா வந்தனர். பேருந்தை காரைக்கால் பகுதியை சேர்ந்த முருகவேல் ஓட்டி வந்துள்ளார்.
ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு அனைவரும் பேருந்தில் சென்னை திரும்பினர். சுற்றுலா பேருந்து ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 14-வது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது பேருந்து ஓட்டுநர் முருகவேல் கட்டுப்பாட்டை இழந்து கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்பு சுவரை உடைத்து கொண்டு சென்று அந்தரத்தில் நின்றது.
உடனடியாக பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்துள்ளனர். தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 40 அடி பள்ளத்தில் விழ இருந்த பேருந்து தடுப்பு சுவரில் இருந்த பெரிய கருங்கல் ஒன்றில் மோதி தடுத்து நின்றதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு அனைவரும் உயிர் தப்பினர். ஓட்டுநர் முருகவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.