திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள அடியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. 45 வயதான இவர், கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்திருந்த வீடியோவை கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில், பெரியமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மோகன்-மோகனா என்ற தம்பதியினர், என் பெயரை பயன்படுத்தி, 85 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
அதனை அவர்கள் தராமல் ஏமாற்றிவிட்டதால், கடன் கொடுத்தவர் என்னை மிரட்டி வருகிறார். என்னுடைய வண்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
மேலும், தற்கொலை செய்வதற்கு பயமாக இருந்தாலும், இந்த விஷயம் ஊருக்கு தெரிய வேண்டும் என்றும், நான் நல்லவன் என்பது ஊருக்கு தெரிய வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதையடுத்து, திருப்பதியை மிரட்டிய 5 நபர்களை பிடித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.