சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் செல்போன் டவர் காற்றின் வேகம் தாங்காமல் கீழே விழுந்தது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கரையை கடக்கும் நிகழ்வானது நடைபெற்றது. புயல் கரையை கடக்கும் நிகழ்வை ஒட்டி சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
புயல் காரணமாக வீசிய சூறைக்காற்றால் சென்னை மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. வீட்டின் கூரைகளும் பெயர்ந்து விழுந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவல் துறை கட்டுப்பாட்டு அறையின் செல்போன் டவர் நேற்று பெய்த கனமழை மற்றும் சூரை காற்றின் காரணமாக இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் அந்த செல்போன் டவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சரிந்து விழுந்த செல்போன் டவரை அகற்றி அப்புறப்படுத்தினர். மாண்டஸ் புயல் காரணமாக வீசிய காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் காவல்துறையினரின் செல்போன் டவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.