சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து , அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கிய கூட்டத்தில், மேயர் பிரியா, மறைந்த மாமன்ற உறுப்பினர் சரஸ்வதிக்கு இரங்கல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கட்சிகளின் தலைவர்கள் மறைந்த 59-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதிக்கு இரங்கல் தெரிவித்தனர். முன்னதாக பேசிய மேயர் பிரியா, மக்கள் பணி செய்துவரும் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது உடல்நலத்தை பார்த்துக் கொள்வதில்லை என்றார்.
எனவே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஆலோசித்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மாநகராட்சியில் இருக்கும் 196 உறுப்பினர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து நாளைக்கு மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் , 122-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். மேலும் , 146-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் , 59-வது வார்டு திமுக கவுன்சிலர் சரஸ்வதி ஆகியோரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.