விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த நபர்கள் சிலர் காவல் துறையினரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறை அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்து பார்த்தனர். காவல் துறை நடத்திய சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் அதனை விற்பனைக்காக பாக்கெட் போட்டு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சாரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (28), திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வகுமார் (22), திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த அன்பழகன் (44) ஆகிய மூவரும் சேர்ந்து அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அம்பலமானது.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.