சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பி.காம் பயிலும் 19 மாணவர்கள் 7 பைக்குகளில் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்புறம் உள்ள கடலில் குளித்துள்ளனர்.
அப்போது, ராட்சத அலையில் சிக்கிய சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ரோஷன் (21) என்பவர் கடல் நீரில் முழ்கி உயிரிழந்தார்.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (19), கவுதம் (19) ஆகியோர் கடலில் மாயமாகியுள்ளனர். இந்த தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு மீட்பு படைவீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உள்ளூர் மீனவர்களின் துணையோடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.