கிருஷ்ணகிரி அருகே, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் பொருட்கள், வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக, கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்கு, அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், வாகன தனிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பெங்களூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியை மடக்கி, சோதனையில் ஈடுபட்டனர். அதில், ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த 15 டன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுநர் கருணாகரன் என்பவரையும் கைது செய்தனர்.