கோவை மாவட்டம் பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது. ஐதராபாத்தில் வசித்து வந்த இந்த தம்பதி, பல ஆண்டுகளாக குழந்தை இன்றி தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள சாமியார் ஒருவரை பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர், அங்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, அந்த சாமியார், சில பூஜைகளை செய்யும்படி, தம்பதியிடம் கூறியுள்ளார். மிகவும் கொடூரமான முறையில் இருந்த அந்த பூஜைகளை தம்பதியினரும் செய்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதற்கிடையே, பெங்களூருக்கு வந்த அந்த சாமியை, இருவரும் சந்திக்க சென்றுள்ளனர்.
அப்போது, அந்த 37 வயது பெண்ணை மட்டும் தனியாக சந்திக்குமாறு, சாமியார் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணும் சந்திக்க சென்றபோது, தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சாமியார் கூறியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி, தன்னுடைய கணவரிடமும் இதுகுறித்து கூறியுள்ளார். ஆனால், அதனை கேட்டு கொஞ்சமும் அதிர்ச்சி அடையாத கணவன், சாமியார் சொன்னதை செய் என்று மனைவியிடம் கூறியுள்ளார்.
இதனால், கணவன் மீது கோபம் அடைந்த அந்த பெண், தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சில மாதங்கள் கழித்து, கணவன் மீது இருந்த கோபம் தனிந்த பிறகு, மீண்டும் ஐதராபாத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காத அவர், “சாமியார் உன்னை விட்டு பிரிய வேண்டும் என்று என்னிடம் கூறிவிட்டார்” என கூறி, மனைவிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இதையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்ற அந்த பெண், தனக்கு நடந்த கொடுமைகளை புகாராக எழுதி கொடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.