உலகில் உள்ள உயிரிழப்புகளுக்கு, சாலை விபத்துகளும் முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக சாலை விதிகளும், அபராதங்களும், கடுமையாக உயர்த்தப்பட்டாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் உள்ளது.
எனவே, முழு கவனத்துடனும், சாலை விதிகளை மீறாமலும், ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகில் உள்ள மோசமான வாகன ஓட்டுநர்கள் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்தியா பெற்றுள்ள Rank, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது, மோசமான வாகன ஓட்டிகள் என்ற தலைப்பில், பிரிட்டன் நாட்டை சேர்ந்த கம்பேர் தி மார்கெட் என்ற நிறுவனம், ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், தற்போது வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில், முதலிடத்தில் தாய்லாந்தும், இரண்டாவது இடத்தில் பெரு நாடும், 3-வது இடத்தில் லெபனான் நாடும் இடம்பெற்றுள்ளது. மேலும், 4-வது இடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதே போல், சிறந்த ஓட்டுனர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, எஸ்டோனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.