அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் கிராம மக்கள். அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாத அவல நிலை. 6 மணிக்கு மேல் காணாமல் போகும் கிராமம்.*
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு ஊராட்சிக்கு உட்பட்டது தேரேந்தல்பட்டி கிராமம். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகுந்த சிரமத்தோடு வாழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.
தெரு விளக்கு இல்லை, பேருந்து வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ரேசன் கடை இல்லை, அங்கன்வாடி இல்லை, பள்ளிக்கூடம் இல்லை, குண்டும் குழியுமான சாலைகள், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, மற்ற கிராமங்களை போன்று குளியல் தொட்டி இல்லை என அடுக்கு அடுக்காக வேதனையை கூறும் பெண்கள், வாழ்வதற்கே தகுதி இல்லாத கிராமமாக மாறி வருவதால் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசித்த இந்த கிராமத்தினர், வெளியூர்களுக்கு குடிபெயர்ந்து சென்றதால் தற்பொழுது 20 குடியிருப்புகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தனர்.
இதே நிலைமை தொடர்ந்தால் நாங்களும் வெளியேற வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர். ஒரே ஒரு சின்டெக்ஸ் டேங்க் மட்டும்தான் உள்ளது. அதிலும் மின்சாரப் பழுதால் (ஹோல்டேஜ்) திடீரென எடுக்காமல் போய்விடும், சில நேரங்களில் மின்சாரம் இல்லை என்றால் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு தான் அது சரி செய்யப்படும்.
அதுவரை தண்ணீர் ஏற்ற முடியாமலும், மின்சாரம் இல்லாமலும் நாங்கள் மிகுந்த சிரமத்தோடு வாழ்ந்து வருகிறோம், குளியலுக்காக தண்ணீர் தொட்டி கட்டினாலும் அடிக்கடி மின்சாரம் பழுதானதால், சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகிக்காமல் வறண்டு இன்று மண் மற்றும் கற்களாலும் நிரப்பப்பட்ட இடமாக மாறிப்போனது. என்றனர்.
ஏதேனும் அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்களை அழைத்தால் நீங்கள் மெயின் ரோட்டுக்கு வாருங்கள், அங்கு வந்து ஏறிக் கொள்ளுங்கள் என கூறி வர மறுக்கின்றனர். மீறி வந்தால் ஆட்டோவிற்கு அதிகமான தொகையும் கேட்கின்றனர். அங்கன்வாடிக்கு சுமார் 2 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளை நேரடியாக ஒன்றாம் வகுப்பிற்கு அனுப்பி வைப்பதாகவும் கூறுகின்றனர்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் காட்டு வழியாக செல்வதால் பாதுகாப்பு இன்றி உள்ளது. காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தை பள்ளிக்கு சென்றதா இல்லையா என்பதுகூட, வீடு திரும்பினால்தான் தெரியும் என்பதால் பதட்டத்திலேயே நாங்கள் இருக்கிறோம். சுமார் 30 ஏக்கர் விவசாய செய்யக்கூடிய பாசன கண்மாயான தேரேந்தல்பட்டி கண்மாயை தூர்வார கூட அதிகாரிகள் முன் வரவில்லை.
இப்படி பல்வேறு குறைகளுடன் கிராம சபை கூட்டத்தை அணுகினாலும் எங்களுக்கு எந்தவித உரிமைகளும், அடிப்படை தேவைகளும் கிடைக்கவில்லை. அதனாலேயே ஆகஸ்ட் 15ல் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை கூட புறக்கணித்தோம் என்றனர். பஞ்சாயத்து கிளர்க்கிலிருந்து மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்துள்ளோம்.
இது போதாதென்று உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் மனு வழங்கியுள்ளோம்.ஆனால் இதுவரை ஒருமுறை கூட எங்கள் ஊரை வந்து அதிகாரிகள் யாரும் பார்க்க மறுக்கிறார்கள். பார்த்தால்தானே தெரியும் என்னென்ன குறைகள் உள்ளது என்று, எனவும் கூறினர். வார்டு கவுன்சிலரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வரை ஓட்டு கேட்டு எங்கள் ஊருக்கு வருவார்கள். அதோடு சரி, வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்லி கூட எங்கள் ஊருக்கு யாரும் வந்தது கிடையாது. காட்டுவாசிகள் போல் வாழ்ந்து வருகிறோம்.
குறைகளை சொல்லவும் பயமாக உள்ளது. மயான வசதி இல்லை, மழை விழுந்தால் இறந்தவர்களை மிகவும் சிரமத்தோடு அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. ரேஷன் கடைக்காக ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். சீமை கருவேலம் காட்டுக்குள் வசிக்கும் உங்கள் ஊரில் எப்படி பெண் கொடுப்பது, பெண் எடுப்பது என்று பலரும் சம்பந்தம் செய்ய வருவதில்லை எனவும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவு குறைகளையும் தேர்தல் சமயத்தில் ஓட்டு கேட்டு வருபவர்களிடமும் கூறியுள்ளோம் இதுவரை நிறைவேறவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இவர்கள் கிராமத்துக்கு சென்று நேரடியாக பார்வையிட்டு இவர்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.