பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) நேற்று காலமானார். இந்த செய்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரது உடல் ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாணி ஜெயராமின் பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் படுக்கை அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது நிலை தடுமாறி விழுந்ததால் வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிபட்டது. தலையில் ஏற்பட்ட அடி காரணமாக வாணி ஜெயராம் உயிரிழப்பிற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார் அவருடைய வீட்டிற்கு யாரும் வரவில்லை என தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை ஆய்வின் முதல்கட்ட அறிக்கை, வீட்டின் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.