திருமங்கலம் கப்பலூர் சிட்கோ தனியார் நிறுவனத்தில் சாக்கு மூட்டைக்குள் உடல் அழுகிய நிலையில் இரண்டரை வயது பெண் குழந்தை உடல் மீட்பு – கொலையை மறைத்து நாடகமாடிய தந்தை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த கடற்கரை என்பவர் மகன் பாண்டி செல்வம் (26) இவர் மனைவி வனிதா (24) இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.பாண்டி செல்வம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள பெயிண்டிங் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் லப்பம் தயாரிக்கும் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாண்டிச்செல்வம் மனைவி வனிதா இருவருக்கும் இடையே கடந்த இரண்டு மாதமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.வனிதா கோட்டையூரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் வேலைக்கு செல்லும் போது தனது மகள் பார்கவியையும் உடன் அழைத்துச் செல்வதை அறிந்த பாண்டி செல்வம் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்றால் தனது மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் எனக் கூறி பார்கவியை தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு தினந்தோறும் அழைத்து வந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாண்டிச் செல்வம் கம்பெனிக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகள் பார்கவியை காணவில்லை என திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் .இன்று காலை பாண்டி செல்வம் வேலை பார்க்கும் கம்பெனிக்குள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கம்பெனியில் சோதனையிட்ட போது லப்பம் தயாரிக்க பயன்படும் மாவு மூடைகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த சாக்கிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் சாக்கு மூடையை பிரித்துப் பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் பெண் குழந்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது.மேலும் போலீசார் அங்கு நடத்திய விசாரணையில் இறந்த குழந்தை பாண்டி செல்வத்தின் மகள் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து பாண்டி செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இறந்த பெண் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரிடம் தான்தான் கொலை செய்ததாக பாண்டி செல்வம் ஒப்புக் கொண்டுள்ளார். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனை காரணமாக 2 1/2 வயது குழந்தையை கொன்று பணி செய்யும் இடத்தில் சாக்கு முட்டையில் கட்டி வைத்துவிட்டு மகளை காணவில்லை என தந்தை நாடகமாடிய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது