பிறந்தநாள் கொண்டாடி வீடு திரும்பிய போது நின்று கொண்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருவாரூர் அருகே இளவங்கார்குடியைச் சேர்ந்த துளசி (வயது 22) என்ற இளைஞர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணக்கால் அய்யம்பேட்டையில் வசிக்கும் உறவினரின் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக துளசி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இலவங்கார்குடியிலிருந்து மணக்கால் அய்யம்பேட்டைக்கு காரில் சென்றுள்ளனர்.
பிறந்த நாள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்த பொழுது திருவாரூர் அருகே காட்டூர் என்ற இடத்தில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தில் இவர்கள் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த காரில் பயணித்த திருவாரூரைச் சேர்ந்த கணேசன் வயது 21 என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . மேலும் காரில் பயணித்த துளசி, திருவாரூரை சேர்ந்த புஷ்பராஜ், கோவிந்தராஜ், இளவங்கார்குடியைச் சேர்ந்த மணிகண்டன், ஜெகன், சஞ்சய் காட்டூரை சேர்ந்த பாரதி பவித்ரமாணிக்கத்தை சேர்ந்த ஹரிகரன் உள்ளிட்ட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் நின்று கொண்டிருந்த ஜேசிபியில் கார் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இந்த நிலையில் படுகாயம் அடைந்த துளசியை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி துளசியும் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய பொழுது நின்று கொண்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.