திருப்பூர் அருகே சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பயன்பாடற்ற பாறைகுழிகளில் கொட்டப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மேலும் இக்குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் அந்தந்த பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால்., அதிருப்தி அடைந்த பொதுமக்கள், திருப்பூர் காங்கயம் சாலை, புதுப்பாளையத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து மாநகர மற்றும் மாவட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்., ஆனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.