இந்தியா, உலகில் உள்ள அனைத்து அகதிகளையும் மகிழ்விப்பதற்கான சத்திரம் கிடையாது என்று கூறி, அகதியாக தன்னை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை தமிழர் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை தமிழர் ஒருவர், கடந்த 2015-ஆம் ஆண்டு அன்று, கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்தபோது, 10 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதையடுத்து, தண்டனை 7 வருடமாக குறைக்கப்பட்டது. மேலும், சிறைத் தண்டனைக்கு பிறகு, தங்களது நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும், அதுவரை அகதிகள் முகாமில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
தற்போது, இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திபகங்கர் டட்டா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது, “உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு, இந்தியாவால் அடைக்கலம் தர முடியுமா? நாங்களே 140 கோடி மக்களை வைத்து தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். இந்தியா, உலகில் உள்ள அனைத்து அகதிகளையும் மகிழ்விப்பதற்கான சத்திரம் கிடையாது” என்று நீதிபதி டட்டா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தான் ஒரு அகதி என்றும், தன்னுடைய சொந்த நாட்டில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், மனுதாரர் தரப்பு வாதிட்டதற்கு, அப்படியென்றால், வேறு நாட்டிற்கு நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள் என்றும், நீதிபதி தெரிவித்துள்ளார்.