சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் கான் (32). இவர் உபர் செயலி மூலம் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டுக்கு சவாரி வந்துள்ளார்.
பின்னர் சென்னை செல்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலை வழியாக குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சோமங்கலம் சி.ஐ.டி., கல்லூரி அருகில் கூட்டமாக சிலர் சென்னை செல்ல காத்திருந்தனர். அங்கு சென்ற இம்ரான் கான் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.
சென்னை ஏர்போர்ட் செல்ல வேண்டுமென கூறியதை தொடர்ந்து இம்ரான் கான் அவர்களை ஆட்டோவில் ஏற கூறி உள்ளார். அப்போது ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டும் இருவர் இம்ரான் கான் இடம் தகராறு செய்துள்ளனர்.
நாங்கள் 500 ரூபாய்க்கு சவாரி பேசியுள்ளதாகவும், நீ எப்படி 450 ரூபாய்க்கு ஏர்போர்ட் அழைத்து செல்வாய் என இம்ரான் கான் இடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் இம்ரான் கான் மீது ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை இம்ரான் கான் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இம்ரான்கான் சோமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்து அனுப்பியுள்ளனர்.