இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள் மீது, திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி தெய்வச் செயல் மீது, இளம்பெண் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ஏற்கனவே திருமணமான தெய்வச்செயல், தன்னையும் திருமணம் செய்துக் கொண்டு ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
மேலும், சில முக்கிய பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க அவர் முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அரக்கோணம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-விடம் முறையிட்டதையடுத்து, தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து மேடைதோறும் பேசி வரும் முதலமைச்சரே, தங்களது அலங்கோல ஆட்சிக்கு, அரக்கோணமே சாட்சி என்று, சாடியுள்ளார். மேலும், இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகிகள் மீது, இந்த டம்மி அப்பா அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.