சென்னை டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் 42 வயது பெண் ஒருவர் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், எனது 13 வயது மகள் டியூசன் முடிந்து, நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு தனியாக நடந்து வந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், எனது மகளை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா உள்பட 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டி.பி.சத்திரம், புஜ்ஜி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர்.
இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர் என்றும், தற்போது அதிலிருந்து வெளியேறி பைக் டாக்சி மற்றும் ஆன்லைன் உணவு விநியோகம் செய்து வருகிறார் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இரவு நேரங்களில் சாலையில்தனியாக செல்லும் பல்வேறு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து யோகேஸ்வரன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.