சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் அதிமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராயபுரம் பகுதி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காளிங்கராயன் தெருவில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 1994ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திறக்கப்பட்டது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர் சிலை மீது மர்ம நபர்கள் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.