கரூர் மாவட்டம், கடவூர் அருகே சட்டவிரதமாக சுண்ணாம்பு கல்குவாரி செயல்பட்டதாக கூறி பொக்ளின் இயந்திரம் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள் – புகாரளித்து பல மணி நேரம் கடந்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு.
கரூர் மாவட்டம், கடவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காளையாம்பட்டி கிராமத்தில் சுண்ணாம்பு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டுடன் அந்த சுண்ணாம்பு கல்குவாரி உரிமம் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், உரிமம் முடிந்து அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று பொக்ளின் இயந்திரம் மற்றும் லாரிகள் கல்குவாரியில் பணிகள் நடைபெற்று வந்ததால், அப்பகுதி பொதுமக்கள் லாரிகள், பொக்ளின் உள்ளிட்ட சுண்ணாம்புக்கல் பாறையை உடைக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களை சிறை பிடித்தனர்.
இது குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகளுக்கு புகார் அளித்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆன நிலையிலும், சம்பவ இடத்திற்கு அரசுத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியிலும் சட்ட விரோதமாக கோரைகள் செயல்படுவதாக இது குறித்தும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.
மேலும் கடவூர் பகுதியில் அதிகளவு சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுவதால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்.