சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. குறிப்பாக, அதிகளவில் பிரசவங்கள் நடைபெறும் மருத்துவ மையமாகவும் இது திகழ்கிறது.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக மின் வயர் எரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மருத்துவமனை முழுவதும் இருட்டில் மூழ்கியுள்ளது. இதனால் உள்நோயாளிகள் இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக மின்சாரத்தைச் சீர்செய்து நோயாளிகளுக்கு உதவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், மின்சாரம் இல்லாத மருத்துவமனை நிலையை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்தக் காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பூவந்தி உதவி மின் பொறியாளர் கூறியதாவது:
“மருத்துவமனையில் இருந்து புகார் வந்ததை அடுத்து எங்கள் தரப்பில் தேவையான அனைத்தையும் சரிசெய்துவிட்டோம். எங்களால் எந்தப் பிரச்சனையும் இல்லை. மருத்துவமனைக்கு பூமிக்கடியில் இருந்து செல்லும் மின்கேபிள் சேதமடைந்துள்ளது. அதை சரி செய்வது மருத்துவமனைப் பொறுப்பு,” என்றார்.
மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து தெரிவித்ததாவது:
“இரண்டு கட்டிடங்களில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கேபிளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என விளக்கம் அளிக்கப்பட்டது.