மக்கள் பிரதிநிதிகள் சாலையில் நடந்தால் தான் மக்கள் குறைகளை கேட்க முடியும்: ஆர்.எஸ்.பாரதி!

மக்கள் பிரதிநிதிகள் சாலையில் நடந்தால் தான் மக்கள் குறைகளை கேட்க முடியும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவ ராஜசேகரனின் பிறந்தநாளை யொட்டி மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளை கவுரவித்தல் மற்றும் நலத்திட்ட உதவிக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருவள்ளுர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், ராஜ் தொலைகாட்சியின் இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மேடையில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,

அரசியலில் இருக்கின்ற மூத்த தொண்டர்களை எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை பாராட்டும் நிகழ்வை பின்பற்ற வேண்டும்.

அரசியல் 64 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் நான் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வேண்டுகோளாகவே இதை வைக்கின்றேன். வயதான மூத்த தொண்டர்களை பாராட்டுவதன் மூலம் அவர்கள் இன்னும் தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

இன்றைக்கு இருக்கும் சில மன்ற உறுப்பினர்கள் சாலையில் நடந்து செல்வது கேவலமாக நினைக்கின்றனர். என்றைக்கு சாலையில் நடந்து வருகின்றோமோ அப்பொழுதுதான் மக்கள் தலைவராக மாற முடியும்.

அனைத்து கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்று கூறுகின்றேன் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து சாலையில் நடந்து வந்தால் பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறுவார்கள்.

மாமன்ற உறுப்பினர்கள் இதுபோன்று இருந்தால் தான் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க முடியும் என்றார்.

RELATED ARTICLES

Recent News