அயோத்யா பகுதியில் இருந்து டெல்லிக்கு, கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று, இண்டிகோ விமானம் சென்றுள்ளது.
அந்த விமானத்தில் காவல்துறை துணை ஆணையர் சதீஷ் குமார் பயணித்துள்ளார். இவர், தனது எக்ஸ் தளத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“அயோத்யாவில் இருந்து டெல்லிக்கு, இண்டிகோ விமானம், எண் 6E2702-ல் நேற்று பயணித்தபோது, கவலையான அனுபவம் ஏற்பட்டது. விமானம் புறப்படும் நேரம் 3.25 p.m மற்றும் விமானம் தரையிறக்கப்படும் நேரம் 4.30 p.m. சரியாக, 4.15 p.m இருக்கும்போது, டெல்லியில் வானிலை சரியாக இல்லை என்று விமான ஓட்டுநர் அறிவித்திருந்தார்.
மேலும், 45 நிமிடங்களுக்கான Holding Fuel இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இரண்டு முறை தரையிறக்க விமான முயற்சி செய்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக, அவரால் முடியவில்லை.
இருப்பினும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, நீண்ட நேரத்தை வீணாக்கினார். 5.30 p.m மணி இருக்கும்போது, சண்டிகரில் விமானத்தை தரையிறக்க உள்ளோம் என்று, விமானி அறிவித்தார்.
அந்த சமயத்தில், நிறைய பயணிகளும், விமான ஊழியர்களில் ஒருவரும் கூட, அதிர்ச்சி காரணமாக, வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இறுதியில், 6.10 p.m-க்கு சண்டிகர் விமான நிலையத்தில், விமானம் தரையிறக்கப்பட்டது.
வெறும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மட்டுமே Holding Fuel இருக்கும்போது, விமானம் தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா? அல்லது நூலிழையில் தப்பித்தோமா? என்று தயவு செய்து விசாரணை நடத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
இவரது பதிவுக்கு, பதில் அளித்த முன்னாள் விமானி ஷக்தி லும்பா, “இரண்டு முறை தோல்வி அடைந்தபோதே, விமானத்தை வேறு விமான நிலையத்திற்கு திசை திருப்பி இருக்க வேண்டும்.
விமானத்தை வேறு விமான நிலையத்திற்கு திசை திருப்பாமல், தொடர்ச்சியாக நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுவது, பாதுகாப்பு விதிகளை மீறியது ஆகும்.” என்று கூறியுள்ளார்.
சதீஷ் குமாரின் இந்த பதிவு, இணையத்தில் உள்ள மற்ற சமூக வலைதளவாசிகளிடமும், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, இந்த குற்றச்சாட்டு குறித்து, இண்டிகோ விமான நிறுவனம் சார்பில், எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.